16 வயது சிறுமி கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில், தனது இன்ஸ்டா நண்பர்களை வைத்து கஞ்சா புகைக்க வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் பகுதியில் கடந்த 15ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்து சென்றனர். அதன் தொடர்ச்சியாக அதே இடத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்தது சென்ற முதியவரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான புகார்கள் போலீசாருக்கு செல்ல, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அபிராமபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் இதேபோல் ஒருவரிடம் செல்போனை பறித்து சென்றனர். இப்படி தொடர்ச்சியாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், இதுகுறித்து ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் செல்போன் பறிப்புகள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மொத்தமாக எடுத்து அதனை ஆய்வு செய்தனர். மொத்தமாக 42 சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 16 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் இறுதியாகச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதில் 16 வயதான அந்த சிறுமி கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில், பெற்றோர்கள் அச்சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமி தேனாம்பேட்டையை சேர்ந்த விவேக் என்பவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனியார் லாட்ஜில் தங்கி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் நண்பர்களான சென்னையை சேர்ந்த ஜெகன், சிதம்பரம் ஜெகதீசன், தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை வைத்து அதில்வரும் பணத்தை கொண்டு கஞ்சா புகைத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து மொத்தம் 166 செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐ பேட், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.