Skip to main content

கைப்பையில் இருந்த வெடிபொருள் குறிப்புகள்; ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பா? - சென்னையில் திடுக்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Explosive notes in the handbag; Connection with -Shocked in Chennai

 

காவல்துறையின் வாகன சோதனையின் போது தப்பித்துச் சென்ற நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை, ராயபுரம் கல் மண்டபம் அருகே உள்ள பாலம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன விதிமீறல்கள் தொடர்பாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே வாகனத்தில் மூன்று பேர் தலைக்கவசம் அணியாமல் வந்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களை மடக்க முயன்றனர். ஆனால் போலீசார் இருப்பதை சுதாரித்துக் கொண்ட அவர்கள் வாகனத்தை எதிர்புறமாக திருப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.

 

இதனால் சந்தேகமடைந்த போக்குவரத்து போலீசார் மற்றொரு வாகனத்தில் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர். இதில் பிடிபட்ட மூன்று பேரிடம் இருந்து கைப்பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேரில் இருவர் 19 வயது உடையவர்கள். மூன்றாவது நபரின்  பெயர் முகமது மீரான் என்பதும், அவர் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரையும் ராயபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பையில் இருந்த பொருட்கள் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பான ஆவணங்கள் அந்த பையில் இருந்தது. அதோடு மட்டுமல்லாது வெடிபொருள் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக யூடியூப் டுடோரியல் வீடியோக்களைப் பார்த்து அது தொடர்பான வேதிப்பொருட்கள் மற்றும் குறிப்புகள் அந்த பையில் இருந்தது. உடனடியாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், கலவரத்தைத் தூண்டுவது, நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் முகமது மீரான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபருக்கும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அண்மையில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தமிழகத்தில் 45 இடங்களிலும், உளவுத்துறையின் சுற்றறிக்கையை அடுத்து சென்னை காவல்துறையினர் சென்னையில் நான்கு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்