தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், அதே பகுதியின் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் இருவரும் குடும்ப வழியில் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவருமே அடிப்படையில் தலைமைக் காவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது பணியிலிருப்பவர்கள்.
செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரகுராஜன், நேற்று காலை காவல்துறை அலுவலக பொது குறிப்பேட்டில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தனது குடும்ப பகை காரணமாக தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக எழுதி வைத்து விட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த அலுவலக குறிப்பேட்டில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் எழுதியிருப்பதாவது. கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார். அவர் எனது மாமியருக்கு நெருங்கிய சித்தப்பா மகன் ஆவார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வரும் நிலையில், அந்த பகையுணர்வில் என்னை பல வழிகளில், நேரிலும் தொலைபேசி மூலமும் தகாத வார்த்தைகளால் மனம் வருந்தும்படி பேசி வருகிறார். இருப்பினும் நான் பொறுமையோடு நடந்துள்ளேன். இது என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
கருங்குளம் பகுதியில் கேமரா பொருத்துவதற்கும், ஆதிச்சநல்லூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கும் ஆட்களை பிடித்து தருமாறு கேட்டு வருகிறார். அதனால் ஸ்பான்சர் தேடி அலைய வேண்டியுள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்கிறேன். இவ்வாறு காவல் துறையின் பொது நாட்குறிப்பில் ரெகுராஜன் பதிவு செய்துள்ளார்.
நேற்று காலை வாக்கி டாக்கியில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. அழைப்பின் பேரில் மணக்கரைக்கு இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் சென்றாராம். இதனை நாட்குறிப்பில் அவர் பதிவு செய்யாமல் அவசரமாக சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்திற்கு வந்த டி.எஸ்.பி். சுரேஷ்குமார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை என எழுதி வைத்து விட்டு மீண்டும் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டிருக்கிறார். ரெகுராஜன், தான் தூதுகுழி தாண்டி மணக்கரை செல்வதாக கூறினாராம். அது சமயம் டி.எஸ்.பி. கடுமையான வார்த்தைகளால் அவதூறாக பேசினாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனை செல்கிறேன் என காவல் துறையின் அலுவலக பொது குறிப்பேட்டில் குறிப்பு எழுதி வைத்து விட்டு இன்பெக்டர் ரெகுராஜன் சென்றுள்ளார்.
காவல்துறை மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இது குறித்து துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் மாவட்டக் காவல் துறை அதிகாரிகள்.