கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நேற்று (18-06-24) இரவு, 10க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலியாலும், கண் எரிச்சல் பாதிப்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களில், தற்போது வரை 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 7க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயிரிழந்த குடும்பத்தினர் தெரிவிக்கையில், கள்ளச்சாராயம் குடித்துதான் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவிக்கையில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை. கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியைப் பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதனால் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.