பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.