
கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (30.06.2021) ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பூட்டப்பட்ட அறைக்குள் பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்காமல் இந்த ரகசியக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான்சிமேரி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா வரவேற்றார். இதில் திமுக, அதிமுக, விசிக, பாமக, சுயேட்சை கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கவுன்சிலர்கள், "அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பகுதிகளுக்கும் நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் எங்களிடம் குறைகளைத் தெரிவிக்கின்றனர்" என வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஒன்றியக்குழு தலைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும் போதிய விளக்கம் அளிக்கவில்லை என ஒன்றியக் கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர்.
கூட்டத்தில், இறுதியாக குடிநீர் பைப் லைன் அமைத்தல், பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடித்தல், புதிய திட்டப்பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
இதனிடையே, ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் பாமகவிற்கு ஆதரவாக வாக்களித்த சுயேட்சை கவுன்சிலர் வரம்பனூர் சிவக்குமார், திடீரென்று திமுக கவுன்சிலர்கள் உட்கார்ந்திருந்த வரிசையில் சென்று அமர்ந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
"கவுன்சிலராக பதவியேற்றதிலிருந்து திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இன்றி சுயேட்சை வேட்பாளரை மக்கள் எங்கள் வார்டில் தேர்ந்தெடுத்தனர். ஆனால், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், தேர்தல் முடிந்து 4 மாதங்களாகியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனை சேர்மன் கண்டுகொள்ளவில்லை. நல்லூர் அலுவலகத்தில் முறையான நிர்வாகம் நடக்கவில்லை. எனவே, ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த நான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தேன்" என சிவக்குமார் கூறினார்.
எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் வாக்குவாதம், தலைவர் (பாமக) ஆதரவு சுயேட்சை கவுன்சிலர் திமுக கவுன்சிலர்களுடன் உட்கார்ந்தது போன்றவற்றால் நல்லூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.