வரலாற்று சுவடுகள் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை. எந்த இடத்தில் தோண்டினாலும் ஏதாவது ஒரு வரலாற்று சுவடு கிடைக்கும். ஆனால் இதனை பாதுகாக்க வேண்டிய அரசாங்கங்கள், பெயருக்கு ஒரு பதாகை வைப்பதுடன் சரி.. அத்தனை வரலாற்றும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. தனிநபர்கள் ஆக்கிரமித்து அழிப்பதைவிட அரசாங்க அதிகாரிகளே அழித்து வருகிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு ஆவணப்படுத்துங்கள், பாதுகாக்கப்பட வேண்டும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று உத்தரவுகள் போட்டாலும் கூட அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை அதிகாரிகள். அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, சித்தன்னவாசல், இப்படி பலநூறு கிராமங்களில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது நடுகற்களும் தமிழர்களின் வரலாறுகளும். அன்னவாசல், பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கூட மண் அள்ளும் திருடர்களும், கல் உடைக்கவுமாக வரலாறுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நடுகற்கள் நாசமாகிக் கொண்டிருக்கிறது. பொன்னமராவதி கண்ணனூர் பகுதியில் பரந்துவிரிந்த பரப்பளவில் நம் மூதாதையர்களின் வரலாறுகளைச் சொல்லும் நடுகற்கள் பல ஏக்கரில் நடப்பட்டும் பரப்பியும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களை ஆக்கிரமித்த வனத்துறை தைல மரக்காடுகள் வளர்க்க நடுகற்களை பிடிங்கி எறிந்து அழித்து உழுது விட்டனர்.
அங்கே ஆய்வுக்கு சென்ற புதுக்கோட்டை தொல்லியல் கழக்கத்தில் தலைவர் கரு.ராசேந்திரன் தமழிர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டு வருகிறது. பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டு வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு சென்றார். சில மாதங்களுக்கு முன்பு பிடிங்கப்பட்ட கற்களை மீண்டும் நடுவதுடன் முழுமையாக பாதுக்காக்கப்ப6ட வேண்டும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் கற்களை பிடிங்கி அழிக்கும் செயலில் வனத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இப்படி எங்கே தோண்டினாலும் வரலாறுகள் கிடைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தற்போது தோண்ட தோண்ட பீரங்கி குண்டுகள் கிடைத்திருக்கிறது. அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் உள்ளது கீழாநிலைக்கோட்டை 41 ஏக்கர் பரப்பளவில் 30 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள செம்புரான்கல் கோட்டை சுவர்கள் உடைந்து கிடந்தாலும் பல இடங்களில் நிமிர்ந்தும் நிற்கிறது. பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் ஆட்சியை கைப்பற்றும் உள்விவகாரத்தில் பாண்டியர்கள் சகோதர யுத்தம் நடந்த போது ஒரு தரப்பிற்கு ஆதரவாக இலங்கையில் இருந்து தளபதி லங்காபுரன் குலசேகரன் தலைமையில் ஒரு படை வந்து கீழா நிலையில் இலங்கை படை முற்றிலுமாக அழிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது என்று வரலாறுகள் சொல்கிறது.
இந்த வரலாறு இலங்கையில் உள்ள மகா வம்சம் என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், தஞ்சை மராட்டிய மன்னர்கள் என்று அடுத்தடுத்து மாறி மாறி 18 ம் தொண்டைமான் மன்னர்களிடம் வந்த போது தான் ஆங்கிலேயர்களிடம் இணக்கமாக இருந்ததால் பீரங்கிகளும் வைத்திருந்தனர். 41 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோட்டையில் தெற்கில் முனியும், வடக்கில் காளி, ஆஞ்சநேயர் கோயில்களும் இருந்துள்ளது. பாண்டியர்கள் வசம் இருந்ததன் சாட்சியாக 4 கைகள், மண்டை ஓட்டு மாலை, கத்தி போன்றவற்றுடன் உள்ள வீரபத்திர்ர் சிலையும் சிதிலமடைந்து கிடக்கிறது.
கோட்டையின் மேல் ஏறினால் அதே இடத்தில் தான் இறங்கும் வழி இருந்துள்ளது. கோட்டை மதில் சுவரில் ஏறி கண்காணிக்க ஒவ்வொரு இடத்திலும் நேராக பார்க்கவும் ஓரங்களை பார்க்கவுமாக சந்துகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 பீரங்கிகள் இருந்துள்ளது ஆனால் தற்போது ஒரு பீரங்கி மட்டுமே உள்ளது. கோட்டைக்குள் தற்போது 84 கிராமத்தார்கள் வழிபடும் அரியநாச்சியார் கோயிலும் உள்ளது. கோட்டைக்குள் வீடுகளும் வந்துவிட்டது. அரியநாயகி அம்மன் கோயிலின் அழகிய குடிதண்ணர் ஊருணியை 1954 ம் ஆண்டு ராமய்யா என்பவரால் சீரமைக்கப்பட்டு செம்புரான்கற்களால் கட்டப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோட்டை பகுதியில் பீரங்கி இருக்கும் கீழ்தளத்தில் மினகம்பங்கள் நட குழி தோண்டிய போது கற்களால் செய்யப்பட்ட ஏராளமான பீரங்கி குண்டுகள் வந்து கொண்டே இருந்தது. அதைப் பார்த்தவர்கள் அதற்கு மேல் தோண்டாமல் நிறுத்திவிட்டனர். கோட்டையில் பீரங்கி அமைந்துள்ள இடத்தில் பீரங்கி குண்டுகள் கிடைத்திருப்பது ஆய்வாளர்களை கோட்டையை நோக்கி இழுத்து வருகிறது. கோட்டைப் பகுதிக்குள் ஆங்காங்கே சிதிலமடைந்த கட்டிடங்களும் உள்ளது. அகழாய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் எப்போது ஆய்வுகள் நடக்கப் போகிறது.