தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துப் பத்திரங்களை காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து, இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், எம்.பன்னீர்செல்வம் தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் ரொக்கம், 61 தங்கக் காசுகள், 3.6 கிலோ தங்க நகைகள், 6.4 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 இடங்களில் உள்ள அவரது அசையாச் சொத்துகளை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இவர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.