கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் ஆசிரியர், முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது பள்ளியின் முதல்வர் சதீஸ்குமார் அந்த சிறுமியிடம் இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதனால் பெற்றோர்கள் பெரிதும் வேதனை அடைவார்கள் என்று கூறியுள்ளார். அதேசமயம் கடந்த கடந்த 16ஆம் தேதி பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனது பெற்றோரிடம் உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியைச் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் என்.சி.சி. பயிற்று சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மற்றும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள சிவராமன், என்.சி.சி. பயிற்சியாளர் சுதாகர் இருவரையும் பிடிக்க 4 தனிப்படை போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த சிவராமன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பதவி வகித்து வந்தார். இவர் இந்த வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமனைக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பொன்மலை குட்டை பகுதியில் தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published on 19/08/2024 | Edited on 19/08/2024