ஈரோடு மாவட்ட தனிப்பிரிவு தலைமை காவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனையின் கரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார். இவர், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த ஒரு மாத காலமாக ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் தனிப்பிரிவு தலைமை காவலர் வேல்குமார் வீட்டில் கடந்த 22ந் தேதி அவர் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், அசையா சொத்துக்களின் ஆவணங்கள், வங்கி பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றினர். மேலும், வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு குறித்து வேல்குமாரிடமும், வேல்குமாரின் மனைவியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வேல்குமார் பணம், நகை ஏதேனும் பதுக்கி வைத்துள்ளரா? என வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது மட்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அவர்மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை அலுவலகத்திற்கு வரவழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவதன் காரணமாக தனிப்பிரிவு தலைமை காவலர் வேல்குமாரை பணியிடைநீக்கம் செய்வதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை 25 ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்டான ஏட்டு வேல்குமாரிடம் ஒரு டைரியும் அவரது செல்போனையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது டைரியில் பல அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.