சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி மாலை, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அதே ஊரில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த கிழவிதம்மம் ஊரணியில், காட்டாமணக்குச் செடிகள் நிறைந்த புதரில், சடலமாகக் கிடப்பதாகத் தகவல் வெளியானது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றியபோது, உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஏம்பல் பேருந்து நிலையம் அருகே, பூக்கடை நடத்திவரும் மாரிமுத்து மகன் சாமுவேல் (எ) ராஜா (பல கோயில்களில் பூசாரியாக உள்ளவர்) சம்மந்தப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்ற தகவல் கிடைத்தது. அவனை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். 'தான் ஒருவனே சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக' விசாரணையில் கூறினான்.
இதனையடுத்து சாமுவேல் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 2020 டிசம்பர் 29 ஆம் தேதி குற்றவாளியான சாமுவேல் (எ) ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனைத்தொடர்ந்து இந்த தூக்குத்தண்டனையை உறுதிப்படுத்த காவல்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த வைத்யநாதன், ஜெயசுதா தலைமையிலான அமர்வு, முறையான விசாரணைக்குப் பின்னே இந்த தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர்.