ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் பகுதியில் மறைந்த முத்தராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30ஆம் தேதி முத்தராமலிங்க தேவரின் குருபூஜை விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி 30ஆம் தேதி நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று (26-10-23) நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பின், ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மரியாதை செலுத்த இருக்கிறார். அதனால், ரத்த உறவுகள் அவரை அழைக்கும் வகையில், அவருக்கு அதிமுக நிர்வாகிகள் தங்கள் ரத்தத்தினால் ரேகை வைத்து கையொப்பமிடும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது விரல் ரேகையை பதியும் வகையில் ரத்தத்தால் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இது தொடர்பான அழைப்பிதழ் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது