தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை, அதிமுகவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் திமுகவின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார்கள். யாராவது அப்படி மீறி சென்றால் அவர் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார். அவர் மறைந்தப் பிறகு, உறவினர்களாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ அழைப்பு வந்தால் செல்லும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், துக்கம் விசாரிப்பதற்கும் இரு கட்சியினரும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம், செங்கோட்டையன் உறவில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதை விசாரிக்க அதிமுக பிரமுகர்களான மாஜி வேலுமணி, எடப்பாடி மகன் மிதுன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அதேசமயம், திமுக அமைச்சரான முத்துசாமியும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது முத்துசாமியிடம், செங்கோட்டையன் சற்று சகஜமாக பேசியுள்ளார். அதில், ‘தோப்பு வெங்கடாசலம் உங்கள் கட்சிக்கு வந்திருக்கிறார். அவர் விசுவாசம் இல்லாதவர். அவரைக் கட்சியில் வளர விடாதீர்கள். ரொம்பவும் டேஞ்சரான ஆள்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அதற்கு முத்துசாமி, ‘நான் எல்லாவற்றிலும் கவனமானவன்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, மாவட்ட அரசியல் பற்றியும், பழைய நண்பர்கள் பற்றியும் இருவரும் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.