புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி பெரியநாயகி (வயது 60) இன்று (10/04/2024) செவ்வாய்க் கிழமை மாலை தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மேய்சலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஓட்டிவர சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் உறவினர்கள் தேடிச் சென்றபோது காட்டுப் பகுதியில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தார்.
உடனே வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சற்று தூரம் ஓடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை திருச்சி-காரைக்குடி பிரதானச் சாலையில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் ரூ.85 லட்சத்தை காரில் இருந்து திருடிய கும்பலில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வந்து கையெழுத்து போட்டு வருவதும் தெரிய வந்தது. விசாரணையில் மூதாட்டியை கொன்று சங்கிலி மற்றும் தோடுகளை அறுத்துச் சென்று ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக செல்வமணி கூறியுள்ளார்.
செல்வமணி சொன்ன இடத்திலிருந்து நகைகள் மீட்கப்பட்ட நிலையில் போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது கால் உடைந்ததாக கூறப்படுகிறது. செல்வமணி சொந்த ஊரிலேயே மூதாட்டியை கொன்று தங்க நகைகளை திருட வேறு காரணங்கள் உள்ளதா என்றும், அவருடன் வேறு யார் வந்தார்கள் என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.