திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அக்டோபர் 27 ஆம் தேதி வருகை தந்திருந்தனர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுடன் கலந்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செய்திதான் செய்தித்தாள்களில் தினமும் வருவதைப் பார்க்கிறேன். அந்தளவுக்கு உழைக்கிறார். கோரிக்கை விடுத்த 48 மணி நேரத்தில் உடனடியாக செய்து தந்துவிடுகிறார். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, சரவணன் போன்றவர்கள் கோரிக்கை விடுத்தவுடன் உடனடியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கிறார்.
என்னிடம் 10 எச்.ஓ.டி ( துறையின் உயர் அதிகாரிகள் ) இருக்கிறார்கள். என்னிடம் ஒரு கோரிக்கை வந்தால் அது செய்ய முடியுமா? முடியாதா? என்ன சிக்கல், துறை செயலாளர் என்ன சொல்கிறார் என அறிந்து கொள்ளவே குறைந்தது 15 நாட்களாகிறது. இவர் 48 மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிவிடுகிறார். இப்போது கூட நான் இங்கு கோரிக்கைகளைச் சொல்லச்சொல்ல அருகில் உள்ள துறை செயலாளர் குமரகுருபரனிடம் முடியுமா? முடியாதா என விவாதித்துக்கொண்டே இருக்கிறார் எனப் புகழ்ந்து தள்ளினார்.
கூட்ட முடிவில் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு, அண்ணன் அமைச்சர் வேலு அவர்கள் எதையும் தரும் இடத்தில் இருக்கிறார். நாங்கள் கேட்கும் இடத்தில் இருக்கிறோம். அவர் கேட்டு எதையும் இல்லையென எங்களால் சொல்லமுடியாது. அதனால் அவர் மாவட்டத்தில் அவர் எங்கள் துறையில் கேட்டதெல்லாம் செய்து தரப்படும் எனப் பதிலுக்குப் புகழ்ந்தார்.