கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ10 நாணயம் செல்லாது என்று அரசின் வணிக தொடர்பு மற்றும் தனியார் நிறுவனங்கள்,கடைகளில் பொதுமக்களிடம் ரூ10 காயினை வாங்க மறுத்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு சில்லரை ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது வங்கிகளில் வியாபாரிகளுக்கு பத்து ரூபாய் நாணயங்கள் நிறைய வழங்கப்பட்டன. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என சிலர் கிளப்பி விட்ட புரளியால் யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் பயணிகளிடம் ரூ10 நாணயம் வாங்க மறுக்கின்றனர்.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலகம், காதி கிராப்ட்,மின்துறை அலுவலகம்,கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் வர்த்தக நிறுவனங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் நாணயங்களை வாங்க மறுக்கிறது. இதனால் வர்த்தகர்கள்,பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்களை வைத்து கொண்டு தவித்து வருகின்றனர்.
சிதம்பரம்,கடலூர்,வடலூர்,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளிலுள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை. ஆகையால் உடனடியாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க அரசு உத்தரவிடுவதோடு, வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் இனிப்பு கடை நடத்தி வரும் கார்த்தி என்பவர் கூறுகையில், ரூ 10 நாணயத்தை நான் தொடர்ந்து வாங்கி வந்தேன். தற்போது என்னிடம் 12 ஆயிரத்திற்கு மேல் 10ரூ நாணயம் தேங்கியுள்ளது . இதனை மீதி சில்லரையாக பொதுமக்களிடம் கொடுத்தால் அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். நாங்க வங்கிக்கு எடுத்துட்டு போனால் உங்களின் வியாபர சுழற்சிக்கு தான் கொடுத்தோம். அதை ஏன் வங்கியில் கட்ட வருகிறீர்கள் என்று வாங்க மறுக்கிறார்கள்.
சாதரன பெட்டிகடையில் ரூ12 ஆயிரம் தேங்கி இருந்தால் எப்படி தொழில்செய்யமுடியும். பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல் நாங்க மீதி சில்லரை 10ரூ நாணயம் கொடுத்தால் செல்லாது என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சிலபேர் வாங்கிகொள்கிறார்கள். எனவே இந்த 10ரூ நாணயத்தை வங்கியில் வாங்கப்பட்டு பின்னர் பணம் எடுப்பவர்களிடம் கொஞ்சகொஞ்மாக கொடுத்தால் தான் இந்த பிரச்சணைக்கு தீர்வு ஏற்படும். வங்கிகளில் பொதுமக்களிடம் 10ரூ நாணயம் வாங்கவில்லை என்பதால் இது செல்லாது என்ற வதந்தி மக்களிடம் பரவியுள்ளது. இதனை போக்க அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வங்கிகளில் நாணயத்தை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
- காளிதாஸ்