நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.