நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று(21.7.2023) சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மாலை அணிவித்தனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடிக்கு இப்போதுதான் தெரிகிறதா? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்புவார்கள். மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது பிரதமர் மோடி சுற்றுலா சென்று மற்ற நாட்டுத் தலைவர்களைப் பார்க்கிறார். பிரதமர் மனித சமுதாயத்தைச் சேர்ந்தவரா எனத் தெரியவில்லை. மணிப்பூர் கலவரம் இப்போது தான் பிரதமருக்குத் தெரிகிறதா? உளவுத்துறை என்ன செய்கிறது?.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிவாஜியை விட பெரிய நடிகர். பாத யாத்திரை போனாலும் தானும் ஒரு ராகுல் காந்தியாகி விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் ஒருபோதும் அண்ணாமலை, ராகுல் காந்தி ஆக முடியாது. அரசியல் பழிவாங்கலுக்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவி எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது, ஒரு நாள் மோடி மீது அமலாக்கத்துறை திரும்பும். ஏனென்றால் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றார்.