ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், பெருந்துறை அரசு மருத்துவமனையை கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 68 படுக்கைகள் தயாராக உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அனுமதிக்கப்பட்டவர்கள், பெருந்துறை சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர். தேவையெனில் அருகில் உள்ள ஆரம்பரசுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர், செவிலியரை பணியமர்த்திக் கொள்ளலாம்.
கரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கூறி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நோயாளிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்குச் செல்லும், அவசியம் ஏற்பட்டால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்படும். ஒரு வெண்டிலேட்டர் மூலம் பத்து படுக்கைகளை இணைக்க முடியும். இந்த வகையில் பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் 8 வெண்டிலேட்டர்கள் உள்ளதால், 80 பேருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ள அனைவரும் பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரப்போவதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால் 150 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகள் கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள தனியார் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை ஒதுக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை.
தமிழகத்தில் இன்று 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன்படி, அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மளிகை, பால், காய்கறிக் கடைகள் திறந்து இருக்கும். பொதுமக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கும்பலாக வந்து பொருட்களை வாங்கக் கூடாது.
பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் தற்போது வரை 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வந்தவர்களில் கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அது தற்போது 127 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 நாட்கள் கண்காணிப்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப் பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 42 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் 169 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல ஒத்துழைப்பினை அளிக்கின்றனர். அவர்களுக்கு காய்கறி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஏடிஎம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் அப்பகுதியில் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
முன்னதாக ஈரோடு பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனமான அக்கினி ஸ்டில்ஸ் ஏற்பாடு செய்த கிரிமிநாசினி மிஷின் மூலம் பேருந்து நிலையம் முழுக்கவும் மருந்து தெளிக்கப்பட்டது.