கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'சட்டவிரோத மது விற்பனையைக் காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர்?' என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தன்னை தாக்கியதால் படுகாயம் அடைந்ததாகவும். இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோதமாக திண்டுக்கல்லில் நகர்ப்பகுதிகளில் மதுபான கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோக்களையும் வழக்கறிஞர் தரப்பு நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அவற்றைப் பார்த்த நீதிபதி, மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளைக் காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோன்ற காவல்துறையினரின் அலட்சியத்தால்தான் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா? சட்டவிரோத மது விற்பனையைப் பொதுமக்களே சென்று வீடியோ, புகைப்படம் எடுத்த பின்பும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்; குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்த காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பி, சம்பந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.