கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது, இதன் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கட்டும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடுமையான மழை பொழிவு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
ஆனால் வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட வரலாற்றில் பதியப்படாத அளவிற்கு மழை பெய்துள்ளது. எடுத்துக்காட்டாக காயல்பட்டினத்தில் 94 சென்டி மீட்டர் மழை அப்பகுதியை வெள்ளக்காடாக்கியுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். வானிலை ஆய்வு மையத்தில் எச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்தாலும், அது அளித்துள்ள அளவைவிட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்ட சூழ்நிலை இருந்தாலும் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மழைப்பொழிவு உடனே எட்டு அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக இந்திய காவல் படை அதிகாரிகள் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், படகுகள், உபகரணங்கள், 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 15 குழுக்கள், 275 பேர் வீரர்கள் கொண்ட தேசிய மீட்பு படையினர் 10 குழுக்கள் களத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக மீட்புப் பணிகளை விரைவு படுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்'' என்றார்.