பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட போதைப் பொருள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்த சென்னையைச் சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர் வைத்திருந்த பெரிய அளவிலான லக்கேஜ் பேக்கில் 30 கிலோ எடை கொண்ட மெத்தபட்டமைன் எனும் போதைப் பொருள் சிக்கியது.
இதன் மதிப்பு பல கோடி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மதுரை ரயில் நிலையத்தில் இறங்க இருந்த சிலமன் பிரகாஷை பிடித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. டெல்லியிலிருந்தே சிலமன் பிரகாஷ் கண்காணிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி மதுரை வந்த போது பின் தொடர்ந்து வந்த அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்து இருப்பது தெரியவந்தது.
அண்மையில் சினிமா தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியாகவும் இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மதுரையில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் வலைதளப்பதிவில், 'தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
பெற்றோர்களே, தாய்மார்களே - இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோபட்டமைன் போதைப்பொருள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப்பொருட்களும் சர்வசாதாரணமாக புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த திமுக அரசின் முதல்வருக்கு என்னுடைய கடும் கண்டனம்' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 1, 2024
பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக்…