'கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடந்த கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிக என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில் 'கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2021 அக்டோபர் 2ஆம் தேதி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவினர் குளறுபடி செய்தனர். இதன் காரணமாக தேர்தலானது ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியை திமுகவினர் கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதனால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும்' என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபொழுது நீதிபதிகள், 'டிசம்பர் 19ஆம் தேதி கரூர் தேர்தல் நடத்தும் அலுவலர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். ஆனால் வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முடிவை வெளியிடக்கூடாது' என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தப்பட்ட அன்றைய தினம் மனுதாரர் திருவிக கடத்தப்பட்டதால் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலில் திமுகவிற்கு ஏழு வாக்குகளும், அதிமுகவிற்கு நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளது. மனுதாரர் தேர்தல் அன்று வாக்களித்திருந்தாலும் தேர்தல் முடிவில் மாற்றம் நிகழ்ந்திருக்கப் போவதில்லை எனவே நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். அதேநேரம் மனுதாரர் கடத்தப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.