வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தற்போது மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று மாலை ஓ. பன்னீர்செல்வம் தொடங்க இருந்த புரட்சி பயண தொடக்க விழா நடைபெற இருந்த இடத்தில் கனமழை பெய்தது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து புரட்சி பயண தொடக்க விழா ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
இதையடுத்து புரட்சி பயண தொடக்க விழாவிற்கு அங்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் அங்கிருந்த சில தொண்டர்களில் ஒருவர் மட்டும் பிளாஸ்டிக் சேரை தலையில் கவிழ்த்தபடி, “புயலே வந்தாலும் ஓபிஎஸ் ஐயாவை விட்டுப் போக மாட்டோம். எங்கள் ஐயாவுக்காக எங்கள் உயிரை கொடுப்போம். எங்கள் ஐயாவை யாரையும் நெருங்க விடமாட்டோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியை மண்ணைக் கவ்வ வைப்போம் நாங்கள். தொண்டனின் இதயத்தில் எடப்பாடிக்கு இடமில்லை” எனத் தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.