‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது.
இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.
இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.