தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலகக்கோரி சேலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும் சேலத்தில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் இன்று (மே 25, 2018) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் இருந்து அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அனைத்துக் கட்சியினரும் பேரணியாக புதிய பேருந்து நிலையம் வரை வந்தனர். பின்னர் அவர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலக வேண்டும் என்றும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்களை
எழுப்பினர்.
மறியலில் ஈடுபட்டதாக ராஜேந்திரன் எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி சேலம் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் ஜெயசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்,
திமுக மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.