சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் எம்.பி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்டி கொரியர் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவாஸ் கனி தற்போது ராமநாதபுரம் எம்பியாக இருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் போட்டியிட கூட்டணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் சோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாகவே சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலத்தில் பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவலகத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றிவிட்டு முக்கிய நிர்வாகிகளை மட்டும் உள்ளே வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்டி கொரியர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை வைத்துள்ளது. வரிஏய்ப்பு நடந்ததாக வருமானத்துறை சோதனை நடத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடப்பது பரபரப்பை கொடுத்திருக்கிறது.