ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்னரசு இன்று காலை ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தைக்கு பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். அப்போது வியாபாரிகள் தென்னரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். தென்னரசு எம்.எல்.ஏவாக இருந்தபோது கொரோனா காலத்தில் காய்கறி சந்தை வ.உ.சி பூங்காவிற்கு மாற்றப்பட்டது. ஆனால் காய்கறி சந்தையை மீண்டும் ஆர்.கே.வி சாலைக்கு மாற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய வியாபாரிகள் தென்னரசுவிடம் இது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால் இதற்கு எல்லாம் பதிலளிக்க முடியாமல் தென்னரசு திருப்பிச் சென்றுள்ளார்.