ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெரா நினைவாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை எனப் பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். பின்னர் திருமகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசும்போது, "நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் துக்கம் வருகிறதா மகிழ்ச்சி தருகிறதா என்று சொல்ல தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சாலைக்கு எனது மகனின் பெயர் வைக்க காரணம் அமைச்சர் முத்துசாமி தான். முதலமைச்சரை பொறுத்தவரை அவரை எதிர்ப்பவராக இருந்தாலும் கூட அவருக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர். இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் காலத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் கூறும்போது," திருமகனுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டவுடன் இளங்கோவன் எனக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த சமயத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. திருமகன் இறந்த செய்தியை நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அன்று இரவே ஈரோட்டுக்கு கிளம்பி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் மறுநாள் முதலமைச்சர், திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் உடனடியாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றலாம் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். சட்டமன்றத்தில் திருமகன் நடவடிக்கையை முதலமைச்சர் உன்னிப்பாக கவனிப்பார். திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை அவரது தந்தை இளங்கோவன் செய்து முடிப்பார்" என்றார்.