ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு பாரதி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). கட்டட மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரம்பட்டிவலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பின்பு கடை அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு புறப்படுவதற்காக நண்பர்களுடன் கோபாலகிருஷ்ணன் நடந்து சென்றபோது, எதிரே மது குடிப்பதற்காக கிருஷ்ணகுமார் என்பவரோடு சேர்ந்து 3 பேர் வந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் மீது இடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று கோபாலகிருஷ்ணனை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்த கோபாலகிருஷ்ணன் கீழே விழுந்தார். மது போதையில்தான் கீழே விழுந்து கிடக்கிறார் என்று நண்பர்கள் கருதினர். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, கோபாலகிருஷ்ணன் பேச்சு மூச்சு இன்றி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி கிருஷ்ணகுமார் (வயது 30), ஜீவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தான் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமார் முதலில் போலீசாரிடம் சிக்கினார். அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜீவா, ஸ்ரீதரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ஜீவா, ஸ்ரீதரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.