ஈரோடு மாவட்டம் சித்தோடில் இருந்து நேற்று மாலை ஈரோடு நோக்கி வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகர் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த இளைஞருக்குக் காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சொகுசு காரில் வந்தவர் மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் (வயது 27) என்பதும், இவரின் கல்லூரி சான்றிதழ் பெறுவதற்காகக் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரியவந்தது.
விபத்து நடந்த பொழுது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிக அளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் சூளை பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.