கொடுமையடா... கொடுமையடா... இந்தக் கொடுமையைக் கேளுங்கைய்யா... என ஈரோடு வீதியில் இறங்கித் தவித்த அந்த மக்கள், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீர் குடித்து உயிர் வாழ்வதாகக் கூறி பென்கள் தலையில் அடித்துக் கொண்டார்.
ஈரோடு நகரில் பல இடங்களில் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாநகரில் தொடர்ந்து மக்கள் நடத்தும் இந்தத் திடீர் போராட்டத்தினால் அரசு அதிகாரிகள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.
வீரப்பன் சத்திரம் மிட்டாய்காரர் தெருவில் 400- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டடத் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால் சென்ற 40 நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதித்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதில் அப்பகுதியில் ரேசன் கார்டு உள்ள 50- க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் அரசின் நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளது. ஆனால், மீதமுள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்திற்கு அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடைக்கவில்லை. இதைவிட கொடுமை ரேசன் கடைகள் மூலம் கொடுத்த அரிசியும் தரமற்றதாக இருப்பதால் உணவுக்கு அதைப் பயன்படுத்த முடியவில்லை என மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தெருவின் மையப்பகுதியில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், நாங்கள் கூலி வேலைக்குச் செல்லும் கட்டடத் தொழிலாளர்கள். கரோனா ஊரடங்கு உத்தரவால் 40 நாளுக்கு மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவியாய்த் தவித்து வருகிறோம்.
நாங்கள் பசி பட்டினியோடு, தண்ணீரைக் குடித்து உயிர் வாழ்கிறோம். சத்தியமாக இது உண்மை. அம்மா உணவகத்திற்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறுகிறார்கள். குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். வீட்டில் உள்ள நடக்க முடியாத முதியவர்களை அழைத்துக்கொண்டு போய் அம்மா உணவகத்தில் சாப்பிட முடியவில்லை. அங்குச் சென்றாலும் மைல் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
ரேசன் கடைகளில், ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையும், உணவுப் பொருட்களும் வழங்கினர். ஆனால், ரேசன் கார்டு இல்லாத எங்களைப் போல நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் எவ்வித உதவித் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
அங்கு வந்த ஈரோடு தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரேசன் கார்டு இல்லாதவர்கள் அனைவரும் உங்கள் பெயர், முகவரி, ஆதார் கார்டு எண் போன்றவற்றை எழுதி கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள். உடனடி ஆய்வு நடத்தி, உங்கள் பகுதிக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுவரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் வழங்கப்படும் உணவுகளைப் போய்ச் சாப்பிடுங்கள். ரேசன் கடையில் மே மாதத்திற்கான பொருட்கள் கொடுக்கும் போது அனைத்தும் தரமானதாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். வேறு வழியில்லாமல் மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள மக்கள் 300- க்கும் மேற்பட்டோர் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் நிவாரணப் பொருட்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அம்மா உணவகத்திலும் அனைவருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. மறு சாப்பாடு கேட்டால் போட மறுக்கின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றாலும் போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எனக் கூறி வெளியே விட மறுக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். கரோனா, கரோனா எனப் பயமுறுத்தியே இன்னும் எத்தனை நாளுக்கு அரசாங்கம் இப்படிக் கொடுமை செய்யும்? என வேதனையுடன் கூறினார்கள்.
அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல்... அடக்க அடக்க மக்களின் கோபம் அடங்க மறுக்கும் என்பதே உண்மை.