பெண்களின் கழுத்தில் உள்ள தாலிக்கொடிடைபிடிங்கிச் செல்லும் ஹெல்மெட் கொள்ளையர் கூட்டம் ஈரோட்டில் அதிகமாகி விட்டது. கடந்த மூன்று மாதமாக செயின் அறுப்பு கொள்ளை என்பது கோபி, மொடக்குறிச்சி, பவானி, சத்தியமங்கலம் என பட்டியல் நீள்கிறது.
![erode incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/ULwBH7AHNNtAWKEdT8RdRxmG7vDcW6_CbU_FmMgI6fE/1572329871/sites/default/files/inline-images/bike%20in_0.jpg)
நேற்று ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி பேராசிரியர் மனைவியின் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை ஹெல்மெட் கொள்ளையர்கள் அறுத்துள்ளார்கள். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .இவரது மனைவி சுகந்தி. கணவன் -மனைவி இருவரும் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊரானா சென்னிமலைக்கு வந்திருந்தனர். இன்று காலை பொருட்கள் வாங்க சென்னிமலையில் இருந்து மோட்டாடார் சைக்கிளில் ஈரோடுக்கு வந்து கொண்டிருந்ததனர். வண்டியை கணவர் வடிவேல் ஒட்டினார்.
மனைவி சுகந்தி பின் சீட்டில் அமர்ந்து வந்தார். சென்னிமலை ரோட்டில் அவர்கள் முத்தம்பாளையம் பிரிவு ரோடு அருகில் சென்ற போது அவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு நபர்கள் வடிவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதுவது போல் வந்தனர். இதனால் நிலை தடுமாறினார் வடிவேல்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் கழுத்தில் கை வைத்து தாலிக்கொடியை இழுத்தனர். 5 பவுன் தாலியான தங்க செயினை பறித்து அவர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
செயின் அறுத்த போது சுகந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது இச்சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு திருடர்களை பிடிக்க முயன்றனர், ஆனால் அந்த மர்ம நபர்கள் வளைந்து, நெளிந்து வேகமெடுத்து மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர். இதனையடுத்து தாலுகா போலீசில் வடிவேலும் சுகந்தியும் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இது போல் ஹெல்மெட் கொள்ளையர்கள் தொடர்ச்சியாக வண்டிகளில் பயணித்துக் கொண்டே கைவரிசை காட்டி வருவதால் மக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் தாலியை காப்பாற்ற அச்சத்துடன் தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியுள்ளது.