காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10ஆம் தேதியன்று தொடங்கியது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று (17.01.2025) மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில், மாநகராட்சி ஆணையரின் அலுவலகத்திற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 56 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
முன்னதாக வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் வளாகத்திற்குள் வந்திருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதே சமயம் வேட்பு மனுத்தாக்கலின் இறுதி நாளான இன்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.