தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வருகிற 17-ஆம் தேதி வரை உள்ள நிலையில் ஊரடங்கு ஒவ்வொரு நகரிலும் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரி, உணவகங்கள், பூ பழம் காய்கறி கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், மின்சார பழுது பார்க்கும் கடை, கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், குளிர்சாதனம் இல்லாத சிறிய நகை கடைகள், ஜவுளிக்கடைகள் (ஊரக பகுதிகளில் மட்டும்) மிக்ஸி கிரைண்டர் பழுது பார்க்கும் கடைகள், டிவி விற்பனை கடைகள் உள்பட 34 வகை கடைகளுக்கு இன்று முதல் தமிழக அரசு நிபந்தனைகளுடன் திறந்து கொள்ள அனுமதித்துள்ளது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான டீக்கடைகளில் அதிகாலை முதலே திறந்திருந்தன. அதில் பார்சல் மட்டுமே அனுமதி என்பதால் வியாபாரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. அதைப்போன்று பேக்கரி கடைகளிலும் சாப்பிட அனுமதி இல்லாமல் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. ஏறக்குறைய 50 நாட்களுக்கு பிறகு கடைகள் திறந்ததால் கடையில் முதலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முககவம்சம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே பார்சலில் டீ வழங்கப்பட்டது. மேலும் சானிடைசர் கடை முன்பு வைக்கப்பட்டிருந்தது.
இதைப்போல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை உள்பட பகுதிகளில் சிறுசிறு ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் முதல் நாள் என்பதால் வியாபாரம் இன்று பெரும்பாலும் இல்லை. ஆனால் செல்போன் பழுது பார்க்கும் கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கட்டுமான பணிக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்களில் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தேவையான பொருட்களான சிமெண்ட், ஹார்ட்வேர் பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டினர்.
இதேபோல் ஈரோடு, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடைகளில் ஏராளமானோர் தங்களது வாகனங்களை கொண்டு வந்திருந்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் மூலமே உணவு வழங்கப்பட்டது. சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் போன்ற பகுதியில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் இன்று செயல்பட்டது. அதேபோல் செல்போன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. ஊரகப் பகுதியில் மட்டும் ஜவுளி கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்று கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் பவானி, நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் பாதிக்கு பாதி ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. திறக்கப்பட்ட கடைகள் அரசு அறிவித்துள்ளபடி நெறி முறைகளை முறையாகக் கடைப்பிடித்து இயங்குகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக முக கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை அந்தக் குழு கண்காணித்தது.
இந்நிலையில் பெருந்துறை, அந்தியூர், பவானி, சென்னிமலை போன்ற பகுதிகளில் மதியம் 2 மணி முதல் கடைகளை அடைக்க போலீசார் வற்புறுத்துவதாக வியாபாரிகள் புகார் கூறியுள்ளனர். அரசு அறிவித்துள்ள நேரம் வரை கடைகளை திறக்க எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு அறிவித்துள்ளபடி, பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தாலும் மக்கள் வரத் தயக்கம் காட்டினர். இதனால் வியாபாரம் மந்தமாகத்தான் இருந்தது. இனிவரும் காலங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் ஈரோடு மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நிறுத்தப்பட்டு, தற்போது 27 நாட்களை கடந்துள்ளது. எனவே பச்சை மண்டலமாக ஈரோடு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.