இன்று (19/02/2021) ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், "மத்திய அரசு, புதிதாகக் கொண்டு வரவுள்ள புகையிலை விற்பனையை முறைப்படுத்தும் சட்டத்தை அமலாக்குவதற்கு முன்பாக, அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பீடி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். வேலை வாய்ப்பு இழந்துள்ள பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாற்று வேலையை அரசுதான் உருவாக்க வேண்டும். வேலை இழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். பீடித் தொழிலாளர்களின் சேம நலத் திட்டங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வருவாயில் இருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து சேம நலத் திட்டங்களான கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும். அனைத்துப் பீடி தொழிலாளர்களையும் பி.எஃப். திட்டத்தில் இணைத்து முழுமையான சலுகைகளையும் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக மாதம் ரூபாய் 6,000 வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்கத் தலைவர் கைபானி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.