
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு 06/11/2020 முதல் 15/04/2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்'. இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.