
விழுப்புரத்திலிருந்து அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக திருப்பதி வரை ரயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. அரகண்டநல்லூர் ரயில்வே பாதையை ஓட்டி உள்ளது டி.தேவனூர். இந்த ஊரில் உள்ள நவீன அரிசி ஆலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜனக்குமார் மகன் அணில் குமார் என்பவர் கடந்த 10 நாட்களாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (14.02.2021) இரவு பணியை முடித்துவிட்டு தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியே சென்ற ரயில் அவர் மீது மோதியதில் அனில்குமார் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். மறுநாள் காலை அவ்வழியே விவசாயிகள் தங்கள் வயல் வேலைகளுக்காக சென்றபோது இளைஞன் ரயிலில் மோதி உடல் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக விழுப்புரம் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விழுப்புரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதறிக்கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், மேற்படி இளைஞன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பது தெரியவந்துள்ளது. ரயில் மோதி, உடல் சிதறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.