சிறுவனைக் கடத்திச் சென்று தவறான உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நபருக்கு 27 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது ஈரோடு நீதிமன்றம்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சின்னக்கவுன்டனூரைச் சேர்ந்த சிறுவன், சென்ற 2019-ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி காலை 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், காணமல் போனார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கொடுமுடி காவல் நிலையத்தில் குற்ற எண்: 121/19 சிறுவன் காணவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, பெத்தநாயக்கன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த சின்னஅரப்புளியின் மகன் செங்கோட்டுவேல் (35 வயது) என்பவர், சிறுவனைக் கடத்திச் சென்று அவரது வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்த தகவல் கிடைத்தப் பிறகு, சென்ற 17.07.2019-ம் தேதி சிறுவனை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுவனிடம் அவர் தவறாக நடந்துகொண்டது தெரிய வந்தது. ஆகவே செங்கோட்டுவேல் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு நேற்று (03 பிப்.) வழங்கப்பட்டது. நீதிபதி மாலதி அவர்கள் குற்றவாளி செங்கோட்டுவேலுக்கு 27 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூபாய்.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சிறுவன் கடத்தல், பாலியல் ரீதியாக தகாத உறவின் மூலம் சிறுவனின் வாழ்க்கையை சிதைத்தது ஆகிய குற்றத்திற்காக வழங்கப்பட்ட 27 வருட சிறை தீர்ப்பும், போலீஸ் புலன் விசாரணையும் இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தது.