Skip to main content

வேளான் சட்டங்களை திரும்பப் பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...! - கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

Erode Communist Party meeting

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட குழுக் கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், தேசிய, மாநில அரசியல் நிலைகளையும், கட்சியின் மாநிலக்குழு கூட்ட முடிவுகளையும் விளக்கிப் பேசினார்.

 

இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, மத்திய பா.ஜ.க. அரசு சமையல் எரிவாயு உருளையின் விலை 15 நாட்களில் ரூபாய் 100 உயர்த்தியுள்ளது. வங்கி மூலம் மானியம் வழங்குவதாக மக்களுக்கு போக்குகாட்டி, எரிவாயு உருளை விலையை மோடி அரசு வஞ்சகமாக இரண்டு மடங்காக்கிவிட்டது. வேறு எரிபொருள் பயன்படுத்துவதை விட்டு விட்டு, எரிவாயுவை மட்டுமே மிக அதிகமான வீடுகள் பயன்படுத்துவதால், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

 

கார்ப்பரேட் நலன்களுக்காக, மக்களின் நல்வாழ்வைப் பலியிடத் தயங்காத மோடி அரசின் இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கண்டிப்பதுடன், எரிவாயு உருளையின் உயர்த்தப்பட்ட விலையைக் குறைக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் உட்பட விவசாயிகள் விரோத, பெருவணிக நிறுவனங்கள் ஆதரவு வேளாண் சட்டங்களையும், விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின் கட்டண சலுகைகளையும் பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் பாஜக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து, கடுங்குளிர் தொடரும் சூழலில் நவம்பர் 26 முதல் லட்சோப லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக நெடுஞ்சாலைகளில் அணிதிரண்டு அமைதியாகப் போராடி வருகிறார்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு  மாவட்ட குழு புரட்சிகர வாழ்த்துக்களையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

மத்திய அரசின் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் தீவிரமாக ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார். இது மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். விவசாய விரோத வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் ஆதரிக்கும் நிலையைக் கைவிட்டு, போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, அதனைப் பிரதிபலிக்கும் முறையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி, மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மாநில விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும், எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 

அதே போல் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும். குறிப்பாக துணை மின் நிலையங்களைப் பராமரிக்க அவுட்சோர்சிங் விடுவதையும், மின்சார வாரியத்தில் கம்பியாளர், உதவியாளர் பணிகளுக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நியமிப்பதையும் கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் நடத்திவரும் போராட்டத்திற்கு இக்கூட்டம் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. 

 

தமிழக அரசும், மின்சார வாரியமும் உடனடியாக தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அடுத்ததாக எதிர்வரும் சட்டத் மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கு தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதென்றும்,  மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைப் பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதென்றும், வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகளை அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆம் ஆண்டு அமைப்புதினமான 26-12-2020 அன்று அனைத்து கிளைகளிலும் கொடியேற்று விழாக்களைச் சிறப்பாக நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்