
ஈரோடு மாவட்டத்தில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பு, பக்கவாத பாதிப்பு பிரச்சனைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சான்றிதழ் வழங்க மருத்துவரை நியமிக்க வேண்டும்.
நரம்பியல், எலும்பு முறிவு சிகிச்சை ஆகியவற்றுக்கு சான்று பெற கோவை அல்லது சேலம் செல்லும் நிலையை மாற்ற வேண்டும். ஈரோடு ரெயில்வே நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தில் நடைமேடை செல்ல அனுமதிக்க வேண்டும். பேட்டரி காரை மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிக்காக இயக்க வேண்டும். பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்த வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் 40-க்கும் மேற்பட்டோர் 2-வது நாளாக நேற்றும் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, “மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து முயற்சியும் செய்து உங்களுக்கு பட்டா வழங்க கடந்த டிசம்பர் மாதமே நில வருவாய் ஆணையருக்கு பரிந்துரை அனுப்பிவிட்டோம். அவர்களிடம் இருந்து உத்தரவு வந்ததும், பட்டா வழங்க இயலும். நாங்களாக வழங்க இயலாது. 2 வாரம் அவகாசம் கொடுத்தால் நில வருவாய் ஆணையரிடம் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கிறேன். இதனால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்” என்றார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி துரைராஜ் கூறியதாவது, “கலெக்டர் அவரது தரப்பில் எடுத்த நடவடிக்கைகளை விளக்கமாக கூறினார். வீடு மனைப் பட்டா தொடர்பாக நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் எங்கள் மனுக்கள் நிலவையில் இருப்பதாக கலெக்டர் கூறியுள்ளார். இதனை அடுத்து நில நிர்வாக ஆணையரை சென்னையில் சந்திக்க எங்கள் மோட்டார் சைக்கிளில் கிளம்ப முயன்றோம். அப்போது கலெக்டர், ‘சென்னை செல்ல நிறைய சிரமங்கள் இருக்கும். நானே உங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று தருகிறேன். இந்த மாத கடைசிக்குள் அனைத்து கோரிக்கைகளும் சரி செய்யப்பட்டு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் மீதமுள்ள 67 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதனை ஏற்று எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் 2 நாட்களாக நடந்து வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.