ஜவுளி என்றாலே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோவையையொட்டிய கொங்கு மண்டலம். கோவை, திருப்பூர்,ஈரோடு, கரூர் இங்கு தான் துணி உற்பத்தி விற்பனை என எல்லாமும் நடைபெறுகிறது. குறிப்பாக ஈரோடு ஜவுளி சந்தை புகழ் வாய்ந்தது. கைக்குட்டையிலிருந்து அனைத்து ஜவுளி ரகங்களும் இங்கு கிடைக்கும். அந்த சந்தையின் பெயர் கனி மார்கெட் என்பது. இவை தவிர மூன்று இடங்களில் ஐவுளி சந்தை செயல்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த கனி மார்கெட்டில் ஆயிரக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து எல்லோரையும் அப்புறப்படுத்தத் தான் மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி இங்கு வருகிறது. இந்த சந்தையில் தினசரி கடைகள் இரண்டாயிரமும், வாரச்சந்தை 1750 கடைகளும் இயங்கி வருகிறது.
குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. இந்த வாரச் சந்தைக்காக வெளி மாநிலங்களான உ.பி., பிகார், டெல்லி, ஒடிசா, கர்நாடகா , மும்பை, கேரளா மற்றும் வெளி நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலிருந்தும் வியாபாரிகள் வருவார்கள். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஜவுளி வியாபாரம் செய்கிறார்கள். ஜவுளி சந்தையில் கிடைக்கும் துணிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தான் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ .54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க இங்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜவுளி சந்தையை அகற்றி அங்கு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே ஜவுளி சந்தை அகற்றும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக ஈரோடு மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் தீபாவளி முடியும் வரை ஜவுளி சந்தையை அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று எந்த வித ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி எந்திரம் மூலம் கடையை அகற்றும் பணி தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் ஜேசிபி எந்திரத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை கடந்த 50 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதை நம்பி பத்தாயிரம் குடும்பங்களும், முப்பதாயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் இங்கு வருவார்கள். இங்கு விற்கப்படும் ஜவுளிகள் மிகவும் குறைவான விலையில் விற்கப்படுவதால் இங்க ஜவுளிகள் அவங்க வீடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், சென்னை வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். நாங்கள் இதுவரைக்கும் மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம். எங்களால் எந்த ஒரு பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இங்கு 54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களுக்கும் முறையாக மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், தற்போது தீபாவளி நெருங்கி வருகிறது. தீபாவளி நேரத்தில் இங்கு கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும். இந்த சமயத்தில் ஜவுளிக்கடையை அகற்றினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் தீபாவளி வரை ஜவுளி கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இன்று எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி போதிய கால அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் கடையை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர் இது என்ன நியாயம். ஸ்மார்ட் சிட்டி மூலம் கடைகள் கட்டி பெரும் பணக்காரர்களுக்கு கார்பரேட் கம்பெனிகளை வாழ வைக்க மத்திய அரசு நினைக்கிறது. இந்த ஜவுளி துணியிலேயே பிறந்து, வளர்ந்து, வாழும் எங்களை அழிக்கப் பார்க்கிறது அரசு " என வேதனையுடன் கூறுகிறார்கள்.