ஈரோடு அதை சுற்றியுள்ள ஊர்கள் மற்றும் கிராமங்களில் கொள்ளையர்களின் கைவரிசை நாளுக்கு நாள் கூடி வருகிறது
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஈரோடு திண்டல், வீரப்பன்சத்திரம், பூந்துறை ரோடு, சின்னியம்பாளையம், மொடக்குறிச்சி, நாடார் மேடு, பெரியார் நாகர்,டீச்சர்ஸ் காலனி, சோலார், பவானி ரோடு என பல்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதேபோல் விடியற்காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொன்டிருந்த நான்கு பெண்களிடம் முகவரி கேட்பது போல் வந்த கொள்ளையர்கள் தாலிக்கொடி மற்றும் தங்க சயின்களை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். அதே போல் வீட்டில் வயதானவர்கள் தனியாக இருப்பதை நோட்டமிட்டு அந்த வீட்டுக்குள் புகுந்து வயதானவர்களை அடித்து மிரட்டி கத்தியை காட்டி நகை பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வக்கீலாக இருப்பவர் ஆர்.காந்தி. இவரின் சொந்த ஊர் ஈரோடு சின்னியம்பாளையம் இங்குள்ள தோட்டத்து வீட்டில் வக்கீல்காந்தியின் மூத்த சகோதரரான குமாரசாமி மற்றும் அவரது மனைவியும் வீட்டில் தனியாக உள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டுக்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் இவர்களை தாக்கி ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட நகைகளை கொள்ளையடித்து போயுள்ளார்கள். இது போல் திருட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு திண்டலில் குடும்பத்துடன் வசித்து வரும் ராஜேஷ் என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கிறார். 13ந் தேதி இரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். ஈரோட்டில் தொடரும் இந்த திருட்டு, கொள்ளைகளால் மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.