சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர், கடந்த 27 ஆம் தேதி இரவு கட்சி விஷயமாக வெளியே சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், இளங்கோவனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெட்டப்பட்டு இறந்து கிடந்த இளங்கோவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இளங்கோவன் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் நேற்று அதிகாலை ரெட்டேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே அதிதீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலிஸாரிடம் சரணடைந்தனர். அவர்களை செம்பியம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வியாசர்பாடி கக்கன் ஜி காலனியைச் சேர்ந்த சஞ்சய்(19), அருண்குமார் (28), கொடுங்கையூர் எம்.ஆர். நகரைச் சேர்ந்த கணேசன் (23), வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (30) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய்க்கும் இளங்கோவனுக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனைக் கொன்றதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். சட்டமன்றத்தில் அதிமுக பகுதிச் செயலாளர் இளங்கோவன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இ.பி.எஸ்., ‘கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இளங்கோவன் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்து வந்ததன் காரணமாக கொலை நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். இளங்கோவன், சஞ்சய் என்பவருடன் ஏற்கனவே முன்விரோதத்தில் ஈடுபட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வரவில்லை” என்று தெரிவித்தார்.