திருச்சி முக்கொம்பில் காவிரியிலிருந்து வெளியேறும் தண்ணீரில் வெள்ள பெருக்கு ஏற்படாத வண்ணம் இருக்கவே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவதற்கு என்றே உருவாக்கப்பட்டது தான் இந்த அணை 1836-ம் ஆண்டு கட்டப்பட்டது. 630 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. அணையின் மேல் உள்ள பாலத்தை குணசீலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் திருச்சிக்கு வருவதற்கும், கரூர் சாலையை அடைவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் இந்த பாலம் வழியாக சென்றுவந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக வந்த உபரிநீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக முக்கொம்பு வழியாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கொம்பு மேலணையில் இருந்து கடந்த 18-ந்தேதி காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 182 ஆண்டு பழமையான கொள்ளிடம் மேலணையின் மதகுகள் பலவீனமடைந்தன.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் 6 முதல் 13 வரையிலான 8 மதகுகள் திடீரென இடிந்துவிழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. நேற்று காலை 14-ம் எண் மதகும் இடிந்துவிழுந்தது. இதனால் அணையில் இடிந்த மதகுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. தகவல் அறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை டிஐ.ஜி, ஐஜி, ஆகியர் அங்கு விரைந்து வந்தனர். 1000க்கும் மேற்பட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அணையின் இரு பகுதிகளிலும் இருந்த கேட்டுகள் மூடப்பட்டன.
பாலம் இடிந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு முழுவதும் முக்கொம்பிலேயே முகாமிட்டு அணையின் உடைந்த பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். முக்கொம்புக்கு வந்து அணையின் உடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அணையை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 நாட்களுக்குள் சீரமைக்கும் பணி நிறைவடையும். மனித உடலுக்கு ஏற்படும் தீடீர் காய்ச்சல் மாதிரி கொள்ளிடம் அணை உடைந்தது. 12 நாட்களாக வந்த வெள்ளம் மற்றும் அழுத்தத்தால் மதகு உடைந்துள்ளது.
ரூ.325 கோடியில் 100 மீட்டர் தள்ளி கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் ரூ.85 கோடியில் கதவணை கட்டப்படும். கொள்ளிடம் அணை இடிந்ததற்கு மணல் கொள்ளை காரணமில்லை என்று திட்டவட்டமாக மறுத்த அவர், மணலுக்கு பதில் எம்சாண்ட் மணல்களே முழுமையாக பயன்படுத்தப்படும் என்றார்.
மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லை பெரியாறில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதே காரணம். முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக அரசு மீது கேரளா அரசு தவறான தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.