சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (27.06.2024) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிக்காக ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் கீழ் செயல்படும்.
முதலமைச்சரின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 45 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகள் சிறந்த தொழில் முறை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும்.
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் முதற் கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அதில் மகளிருக்குப் பயனளிக்கும் அனைத்து தகவல்களைத் தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் 8 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் பரிசோதனை மூலம் திறமைகளைக் கண்டறிய திறமை மதிப்பீட்டு தளம் உருவாக்கப்படும். பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத் திட்டம், அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு தொழில் துறை சார்ந்த பணியிட பயிற்சி அளிக்கப்படும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.