காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரி காட்டுமன்னார்கோவில் அரசு ஆண் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டது. மேலும் கல்லூரிக்குக் கட்டிடம் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் காட்டுமன்னார் கோவில் வட்ட பகுதி மற்றும் வெளி மாவட்டத்திலிருந்தும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரிக்குப் போதுமான இடம் பள்ளியில் இல்லாததால் நெருக்கடியில் கல்லூரி நடத்தப்பட்டு வந்தது. இந்தக் கல்லூரிக்குக் கடந்த 3 ஆண்டுகளாக இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் கல்லூரிக்கு ஏற்ற இடம் தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.ஆனால் சரியான இடம் கிடைக்காமல் கல்லூரி கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனையறிந்த சிதம்பரத்தில் ஹோட்டல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் சகோதரர்களான தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார் ஆகியோர் குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமாக உள்ள 3 ஏக்கர் நிலத்தினை தானமாகத் தருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் வழங்கினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கீழவன்னியூரில் இடத்தைப் பார்வையிட்டுத் தேர்வு செய்தனர். இந்த நிலையில் தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார், ஆகியோர் அவர்களது பராமரிப்பில் இருந்த புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் 20 சென்டையும், அவர்களுக்குச் சொந்தமான 3 ஏக்கரையும் சேர்த்து மொத்தம் 4 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு வழங்க ஒப்புதல் அளித்தார். அதனடிப்படையில் 22-ந்தேதி சனிக்கிழமை குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் தொழிலதிபர் கேதார்நாதன் அந்த நிலத்தை அரசுக்குப் பத்திரப்பதிவு செய்து தந்தார்.
இந்நிகழ்வில் குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் குமராட்சி கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர். ஏழை மாணவர்களின் கல்விக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்கள் குடும்பத்தினருக்கு குமராட்சி பொதுமக்கள், அரசு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து தொழிலதிபர் கேதார்நாதன், சுவேதகுமார் கூறுகையில், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகள் மிகவும் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி கீழவன்னியூர் எங்கள் சொந்த கிராமம், பல ஆண்டுகளுக்கு முன் எங்களது முன்னோர்கள் அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ஏழை மக்களுக்கு இலவமாக வீட்டுமனை பட்டாக்களை வழங்கியுள்ளனர். மேலும் உள்ளிட்ட பல உதவிகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் கல்விக்காக இந்த நிலத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதி கல்வி பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் என்றார்கள்.