- தெ.சு.கவுதமன்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியான இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை அறிவிப்பு தான் இன்றைக்கு பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதுமே உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிர் இலவசப் பேருந்து திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற தருணத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இருந்த சூழலில், முன்னர் இருந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பெருத்த கடன்சுமையை வைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. எனவே உரிமைத்தொகை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தின.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த உரிமைத்தொகை குறித்துதான், தி.மு.க. அரசுமீது கடுமையாகக் குற்றம்சாட்டினார்கள். ஒருபுறம் சொத்து வரி உயர்வு, இன்னொருபுறம், பால் மின்கட்டண உயர்வு என அதிகம் பாதிக்காத வகையில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் இறங்கியது தமிழக அரசு. இன்னொருபுறம், உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகளில் அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் கசியத் தொடங்கியது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக்க முயல, பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, இன்னும் சில மாதங்களில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது பேசினார்.
இறுதி நாளில் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால் உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது உறுதியானது. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானதென்று கூறி அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அதற்கு தி.மு.க. சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பட்ஜெட் உரையில், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். "ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்தத் திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார். இதற்காக இந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லாமல் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு உதவிகரமாகவும், வீட்டை நிர்வகிப்பதற்கான அங்கீகாரமாகவும் இந்த உரிமைத்தொகை அமையும். சுமாராக 70 -80 லட்சம் குடும்பத்தலைவிகள் வரை இந்த உரிமைத்தொகையைப் பெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உரிமைத்தொகை இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள், "வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்" என்று சொல்லாதபடி, "வீட்டை நிர்வகிப்பதற்கான உரிமைத்தொகையாக 1000 ரூபாயைச் சம்பாதிக்கிறேன்" என்ற மன தைரியத்தை உருவாக்க உதவும்! இதற்காக இன்னொருவரை எதிர்நோக்கியிருக்கும் நிலை மாறும்! இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவுகிறது! கூட்டணிக் கட்சியினரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமி மட்டும், அனைவருக்கும் உரிமைத்தொகை என்று அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.