தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கள ஆய்வுக்காகத் திருநெல்வேலி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தன்னை வரவேற்பதற்காகக் காத்திருந்த பொதுமக்களை காரில் இருந்து இறங்கிச் சென்று நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதோடு சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சினார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் செல்பி எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில், டாடா நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.பி. (TP) சோலார் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ரத்தன் டாடாவின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க உள்ளார்.