மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்த சுபாஷ், விஜய் மற்றும் தமிழகத்தை சேர்ந்த முகமது ஷேக் ஆகிய மூவரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பிரச்சார பயணத்தை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கினர். சமூக நல்லிணக்கம் மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியாக சைக்கிளில் மக்களை சந்தித்து ஆரோக்கியமான வாழ்வு, சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கவும், மது பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட மக்களிடம் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய பயணம் காஷ்மீரிலிருந்து, குஜராத், இராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பெங்களூர், ஆந்திரா வழியாக தற்போது தமிழகம் வந்துள்ளனர். இதுவரை 14 ஆயிரம் கிலோமீட்டர் 14 நாட்கள் தொடர்ச்சியாக சைக்கிள் பயணத்தின் இடையே ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்த மூவருக்கும் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வகையில் மதுரை வந்தபோது இவர்களில் ஒருவராகிய ஷேக் சையதை சந்தித்தோம்.
அப்போது அவர் பயணம் குறித்த கருத்துகளை நம்மிடம் பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது “நான் மதுரையை பூர்வீகமாக கொண்டவன் புனேவில் மென்பொருள் இன்ஜீனியராக பணிபுரிகிறேன். என்னுடன் பணிபுரிபவர்களோடு சேர்ந்து 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது இருக்கும் இளைஞர்கள் மது போன்ற போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும், நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணிகாக்கவும் , உடல் ஆரோக்கியம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் சென்று மக்களை சந்திப்பது என்று முடிவெடுத்து செல்கிறோம். இன்று மதுரையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.